தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் அஜித் குமார்.
திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த முறை சூழல் சற்றே வித்தியாசமானது. அஜித்தின் திரையுலகப் போட்டியாளரும் நெருங்கிய நண்பருமான விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் கட்சி தொடங்கி முதல்முறையாகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் துபாயில் தங்கியிருந்தார். எனினும், தேர்தலுக்காக இன்று சென்னை திரும்பிய காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன. அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், அஜித்தைச் சுற்றியே பல அரசியல் விவாதங்கள் நகர்கின்றன.
விஜய்யின் அரசியல் வருகையை முன்னிட்டு, அஜித் விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விஜய் இரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேவேளை, சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருதரப்பு கருத்துக்களும் மோதி வருகின்றன.
வாக்களிப்பது தனிநபர் உரிமை என்றாலும், ஒரு நண்பராக அஜித் குமாரின் வாக்கு யாருக்கு விழப்போகிறது என்பதும், தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இந்தத் தேர்தலில் நிகழுமா என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் ஏப்ரல் 24-ஆம் திகதி அஜித் – ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் வெளியீடு ஆகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.