அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இன்று வொஷிங்கடனில் லெபனான் மற்றும் இஸ்ரேல் தூதர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
தென் லெபனானில் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ள இந்தச் சந்திப்பில், இஸ்ரேலின் யெகியேல் லெய்டர் மற்றும் லெபனானின் நடா ஹமாதே முவாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இன்று காலை 11:30 முதல் பிற்பகல் 3:30 வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனையில், எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தென் லெபனானில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் போரினால் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா இந்த முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்துள்ள ஹிஸ்புல்லாஹ் தலைவர் நயீம் காசிம், இந்தச் சந்திப்பை ரத்து செய்யுமாறு லெபனான் அரசுக்குத் திங்கள்கிழமை அழுத்தம் கொடுத்தார்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியில், மார்கோ ரூபியோ இன்று பிற்பகல் 2.30 க்கு எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி அவர்களையும் சந்தித்துப் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க உள்ளார்.
மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான ஒரு முக்கிய நகர்வாக இந்தச் சந்திப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.