சிங்கள, தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14), பயணிகளின் வருகை குறைந்து காணப்படுவதால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் ரயில்வே திணைக்களம் ஆகியவை தங்களது சேவைகளைத் தேவைக்கு ஏற்ப வரையறுத்துள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பிரதான நகரங்களுக்குத் தேவையான பேருந்து சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பெஸ்டியன் மாவத்தை, மாகும்புர, கடவத்தை மற்றும் கடுவெல போன்ற பிரதான முனையங்களிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால் ரயில் சேவைகளும் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள ரயில்வே செயல்பாட்டு மேற்பார்வையாளர் அசங்க சமரசிங்க, பயணிகள் வருகை குறைவாக இருந்தாலும் கொழும்பிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தபால் ரயில்கள் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் அத்தியாவசிய பயணத் தேவைகளை உறுதி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.