விசேட செய்தி

காஸாவின் நியூட்டன்: இருள் சூழ்ந்த காஸா மக்களின் வாழ்வில் ஔியேற்றிய 15 வயது பாலஸ்தீன சிறுவன்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வரும் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்களின் வாழ்க்கையில் ஒரு இளம் விஞ்ஞானி ஒளியேற்றியிருக்கிறார்.

15 வயதான ஹுசாம் அல் – அத்தார் (Hossam Al-Atta) காஸாவின் நியூட்டன் என செல்லப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்.

தாக்குதல்களால் நிலைகுலைந்திருக்கும் காஸாவில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இச்சிறுவன் மின்சாரம் தயாரிக்கிறார்.

பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்து, முகாமிட்டிருக்கும் இடங்களில் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழிவகைகளை இச்சிறுவன் செய்துகொடுத்துள்ளார்.

”போரினால் மின்சாரம் இல்லாமல் இருந்த இடத்தை ஔிமயமாக்க விரும்பினேன். சந்தைக்கு சென்று டைனமோ (Dynamo) வாங்கினேன். டைனமோவை சுழற்றும் போது அது மின்சாரத்தை உருவாக்கும். எனவே, அதனை கூரை மேல் வைத்தேன். Blade Fan ஒன்றை வாங்கி அதன் மேல் இணைத்தேன். இரவிலோ பகலிலோ எப்போதும் காற்று வீசும். அதனால் எந்நேரத்திலும் மின்சாரம் கிடைக்கும். மின்கலங்கள் (Batteries) இருந்தால் மின்சாரத்தை சேமிக்கலாம் என நினைத்தேன். எனது யோசனை பயனளித்தது. எனது சகோதரனுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். சில நேரங்களில் அவர்கள் கண் விழிக்கையில், அறை இருட்டாக இருக்கும். இப்போது அவர்கள் எப்போது கண் விழித்தாலும் வௌிச்சம் இருக்கும். மீண்டும் உறங்கி விடுவார்கள். அவர்கள் இனி பயப்பட மாட்டார்கள். எங்களிடம் போர்வைகள் இல்லை. தரையில் தான் படுக்கிறோம். நாங்கள் வடக்கில் இருந்து ரஃபா நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம். எங்களிடம் உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறொன்றுமில்லை. இரவில் விமானங்களின் சத்தம் குழந்தைகளை பயமுறுத்துகிறது. நாங்களும் பயத்தில் தான் வாழ்கிறோம். அரபு நாடுகளிடமும் ஏனைய உலக நாடுகளிடமும் இந்த போரை முடிவிற்கு கொண்டு வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” 

என அச்சிறுவன் அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காஸாவை இருளில் மூழ்கடித்திருக்கும் வேளையில், இந்தச் சிறுவனின் முயற்சி கும்மிருட்டில் பிரகாசமாகத் தெரிகிறது.

இணையதளங்களிலும், அல்-ஜசீரா போன்ற பெரிய ஊடகங்களிலும் இவரது வெளிச்சம் வலம் வருகிறது.

நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என அச்சிறுவன் கூறியுள்ளார்.

தனது மகன் சிறுவயதிலிருந்தே திறமையானவன் எனவும், இந்த சமுதாயத்திற்கு உதவும் பல கண்டுபிடிப்புகளை அவன் நிகழ்த்துவான் எனவும் அவனது தாயார் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button