சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 7ஆவது நாள் விசாரணை இன்று

0
4

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று ஏழாவது நாளாகவும் உயர்நீதிமனறில் இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புனவேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, பியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உயர்நிதிமன்ற ஆயம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றபோது, கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி இரவு முதல் நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் நாட்டு மக்களினதும் மனுதார்களினதும் எந்தவொரு அடிப்படை உரிமையையும் ஜனாதிபதி மீறவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் தெரிவித்தது.

எட்டாவது நாடாளுமன்றத்திற்கு நான்கரை வருடங்கள் பூர்த்தியடைந்ததன் பின்னர், அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திக்கா தேமுனி டி சில்வா தெரிவித்தார்.

கலைக்கப்பட்டதன் பின்னர் மழுமையாக செயலற்ற நிலையில் உள்ள நாடாளுமன்றத்தை, மீள் செயற்படுத்துவதை சிறப்பு காரணங்களின் அடிப்படையில் மாத்திரமே ஜனாதிபதியினால் ஆற்ற முடியும் என்றும் மேலதிக மன்றாடியார் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தேசிய பாதுப்புக்கு தாக்கம் செலுத்தும் அவசர நிலை மற்றும் தேசிய பேரிடர் நிலையின்போது குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தகைமை ஜனாதிபதிக்கு உள்ளது. அவ்வாறில்லாவிட்டால், நாடாளுமன்றத்தை மீள கூட்டுமாறு ஜனாதிபதியிடம் எவரும் கோர முடியாது என உயர்நீதிமன்றில் மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திக்கா தேமுனி டி சில்வா தெரிவித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு மனுதாரர்கள் கோருவதில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் உயர்நீதிமன்றில் தெரிவித்தார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் விசாரணைகளை இன்று முற்பகல் 10 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here