நேரிய பாதைக்கு உந்தப்படும் மு.கவும், மன்னிப்புக்குள் மறைய முனையும் ஹக்கீமும்…

0
0

இலங்கை முஸ்லிம்களை ஆழ்ந்த கவலை கொள்ளச் செய்த

 

விடயமாக ஜனாஸா எரிப்பு விவகாரம் நோக்கப்படுகிறது. தற்போதைய இலங்கை அரசு எம்மவர்களின் ஜனாஸாக்களை எரித்து, கையில் சாம்பலை வழங்கிக்கொண்டிருந்த வேளை, எம்மவர்கள் ஜனாஸா எரிப்பை நிறுத்தும் நகர்வாக கூறி, ஜனாஸாக்களை எரிக்கும் அரசுக்குக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அவர்கள் வாக்களித்து மிக நீண்ட நாட்களாகிவிட்டது.
நூற்றுக்கணக்கான ஜனாஸாக்களும் எரிக்கப்பட்டுவிட்டன. இனியும் அவர்களது காலை கழுவி குடித்து சாதிக்க நினைப்பது மடைமைத்தனமானது. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் குறைந்தது முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பாவது கோரியாக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த விடயத்தை பிரதான நோக்காக கொண்டு ஒன்று கூடிய மு.காவின் உயர்பீடம் குறித்த பா.உறுப்பினர்களை மன்னிப்பு கோரியேயாக வேண்டும் என பணித்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையில் நல்லதொரு விடயம்.
இந் நிலையை பகிரங்கமாக அறிவித்துள்ளமை பாராட்டுக்குரியதே! குறித்த அதே தினம் ஒன்று கூடிய அ.இ.ம.காவினால் இவ்வாறான ஒரு தீர்மானத்தை கூட வெளியிட முடியாமை கவலைக்குரியதே! அ.இ.ம.காவின் உயர் பீடம் கட்சி ரீதியாக அரசுக்கு எதிரானதும், ஜனாஸா எரிப்பு எதிராக இயலுமானதை செய்யவும் ஏகமனதான தீர்மானத்திற்கு வந்ததாக அறிய முடிகிறது.
அந்த பா.உறுப்பினர்கள் நால்வரும் மக்களிடம் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக கூறப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
இங்கு தான் சந்தேக பார்வையை செலுத்த வேண்டிய தேவை எழுகிறது.
உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட முடிவை மு.காவின் தலைவர் ஊடகங்களில் அறிவிக்க வேண்டிய தேவையில்லை.
வருகை தந்திருந்த ஊடகங்களிடம் அவர்களை மன்னிப்பு கோருமாறு கூறியிருந்தாலே விடயம் முடிந்திருக்கும்.
 ஊடகங்கள் வந்திருந்த நிலையில் அப்படி மன்னிப்பு கோர வேண்டும் என்ற அழுத்தத்தை குறித்த பா.உறுப்பினர்கள் பெற்றிருந்ததாக தெரியவில்லை.
மு.காவின் தலைவர் நினைத்திருந்தால் அவர்களை அவ் விடத்திலேயே மன்னிப்பு கோரச் செய்திருக்கலாம். குறித்த தினம் கட்சிக்கும், தலைமைக்கும், தங்களால் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் பா.உறுப்பினர் தௌபீக் உயர்பீட பதவிகளில் இருந்து நீங்குவதாக இராஜினாமா கடிதத்தை வழங்கியிருந்தார்.
தன் பிழையை ஏற்று இராஜினாமா கடிதம் கொடுத்தவரை மன்னிப்பு கோரச் சொல்லியிருந்தால். நிச்சயம் மன்னிப்பு கோரியிருப்பாரல்லவா?
மு.காவின் தலைவர் குறித்த தினம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டிருப்பார். நானறிந்த வரை தௌபீக்கின் இராஜினாமா கடிதத்தை ஏற்று, ஏனையோர்களையும் இராஜினாமா செய்ய வைக்கும் அழுத்தம் வழங்குவதே அவரது திட்டமாக இருந்துள்ளது.
மன்னிப்பு கோர வேண்டும் என்ற அழுத்தம் ஏற்படுமென ஹக்கீம் அறிந்திருக்கவில்லை. அதற்கான தயார் படுத்தல்களும் அவர் செய்திருக்கவில்லை. மு.காவின் தலைவரை இந் நிலைக்கு மு.காவின் தீவிர போராளிகள் கொண்டு வந்திருந்தனர் என்ற உண்மையை மறைத்தலாகாது. அல்லாது போனால், சமூக பிழைகளுக்கு ஹக்கீம் தலைமையிலான மு.கா தண்டித்த வரலாறில்லை. இவ் விடத்தில் மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் சிலரின் செயற்பாட்டை பாராட்டியேயாக வேண்டும். தற்போது தான் மு.கா நேரிய பாதை நோக்கி பயணிக்க, அதன் ஆதரவாளர்களால் உந்தப்படுகிறதா எனச் சிந்திப்பதும் தவறாகாது.
18ம் சீர்திருத்தம், உள்ளூராட்சிமன்ற சீர் திருத்தம், மாகாண சபை தேர்தல் முறை மாற்றம், திவிநெகும ஆதரவு என எத்தனையோ சிறுபான்மையினருக்கு எதிரான விடயங்களுக்கு ஹக்கீம் தலைமையிலான மு.கா ஆதரவளித்திருந்தது. இதற்கெல்லாம் மன்னிப்பு கோராத ஹக்கீம், இதனை மாத்திரம் பெரிதாக தூக்குவது நியாயமா? தலைவரோடு சேர்ந்து பிழையொன்றைச் செய்தால், பிழையானது பிழையாகாதோ? இவர்களை மன்னிப்பு கோருமாறு கூறும் தகுதி ஹக்கீமிற்கில்லை என்பதுவே யதார்த்தம். அவரின் கடந்த கால செயற்பாடுகளை இவர்கள் முன்னுதாரமாக கொண்டுள்ளனர்.
குறித்த சட்டத்துக்கு வாக்களித்த பா.உ ஹரீஸ், தான் தலைவர் சொல்லியே வாக்களித்ததாக பகிரங்கமாக கூறியிருந்தார். இதே கருத்தை பா.உ ஹாபிஸ் நஸீரும் பல இடங்களில் பதிவாக்கியிருந்தார். அவர்கள் மன்னிப்பு கோர முன்பு இக் கருத்தையல்லவா வாபஸ் பெற வேண்டும். இது ஹக்கீமின் திருவிளையாடல்களில் ஒன்றென்றால், ஹக்கீமல்லவா மன்னிப்பு கோர வேண்டும். அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மன்னிப்பு கோரியேயாக வேண்டும் என முகநூலில் கொக்கரிப்பவர்கள், இதனை விவாதப் பொருளாக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இவர்கள் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிவிட்டால், ஹக்கீம் தன் மீதுள்ள விமர்சனங்களில் இருந்து தப்பித்துகொள்வார். இதற்காகவே உயர்பீடத்தில் சாதாரண ஒரு பேச்சாக பேசப்பட்டதை ஹக்கீம் அணியினர் தூக்கிப்பிடிப்பதாக ஒருவர் கூறினார்.
பா.உ தௌபீக், மு.கா தலைவரின் சொற் கேட்டு நடப்பவர். கறுப்பு பட்டி அணிந்து 20வது அரசியலமைப்புக்கு எதிர்ப்பு காட்டியவர். இவரே அரசியலமைப்புக்கு ஆதரவளித்திருந்தார் என்றால், அதன் பின்னால் தலைவரின் ஆசீர்வாதம் உள்ளதென்பது வெளிப்படையாக தெரிகிறது. மு.காவின் தலைவரின் குறித்த கூற்றின் பிறகு, பா.உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் ஊடக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் மன்னிப்பு கதை பற்றி எதுவுமே சொல்லவில்லை. மரைக்காருக்கு எதிரான நஸீர் ஹாபிஸின் அறிக்கையில் முஸ்லிம்கள் அரசோடு பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இவர்களா மன்னிப்பு இணங்கியர்கள்?
தற்போது குறித்த எம்.பிகள் ஒரு போதும் மன்னிப்பு கோர மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மன்னிப்பு கோருவதானது முஸ்லிம்களிடத்தில் ராஜபக்ஸ அரசை மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக அரசாக நிறுவுவாதாக அமையும். ஒருபோதும் ராஜபக்ஸ அரசை நம்ப முடியாது என்ற செய்தியையும் அது கூறும். நூற்றுக்கும் மேற்பட்ட தொழில், பல கிலோ மீட்டர் பாதை கொந்தராத்து, ஜப்பான் கோட்டா, அரச வாகனம் என அரசின் சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கும் இவர்கள் இதனை செய்தால் யாது நடக்கும் என்பது யாவரும் அறிந்ததே! உண்மையில் இவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலையில் இல்லை. இவர்கள் மன்னிப்பு கேட்க தகுதியற்றவர்களாக அரசின் சலுகைகள் இவர்களை சூழ்ந்து ஆண்டு கொண்டிருக்கின்றன. இவற்றை அரசு அவர்களிடம் மீள கேட்டால் யாது செய்ய இயலும்?
இந்த விடயத்தை பெரும் பேசு பொருளாக்கியதன் பங்கு மு.மா.ச.உ தவத்துக்குள்ளது. தவத்தின் இந்த செயற்பாட்டுக்கு ஹக்கீம் மிகப் பெரும் விலை கொடுக்கப் போகிறார். தவம் சமூக நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக காட்டினாலும், மு.கா அரசு சார்பு அரசியலை மேற்கொண்டால், தவம் தனதூரில் பூச்சியமாகிவிடுவார். ராஜபக்ஸ அரசை ஏசியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தவம் உள்ளார். அதற்கு கட்சிக்குள் மாபெரும் சவாலை உருவாக்கியுள்ளார்.
தாங்கள் மன்னிப்பு கோர மாட்டோம் என்ற செய்தியினூடாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமுக்கு செக் வைத்துள்ளனர். இதனை ஹக்கீம் கணக்கெடுக்காமல் கடந்து செல்வார் என்பதே உண்மை. இல்லை… இல்லை…. மு.காவின் தலைவர் ஏதாவது செய்வார் என யாராவது நம்பினால் அதனைப் போன்ற ஒரு மடமை வேறு எதுவும் இராது. எவ்வாறு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக செயற்பட முடியாமல் அடிமைகளாக உள்ளனரோ, அது போன்றே ஹக்கீமும் இவர்களுக்கு எதிராக எந்தவிதமான தீவிரமான நடவடிக்கையும் எடுக்க இயலாமல் உள்ளார்.
*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,*
*சம்மாந்துறை.*


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here