இருபதுக்கு வாக்களித்த எம்பிக்களுக்கு தண்டனை வழங்கினால், தலைவருக்கு என்ன தண்டனை வழங்குவது ?

0
0

தலைவரின் அனுமதியுடனேயே இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவு

 

வழங்கியதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.
அதேநேரம் தலைமைத்துவ கட்டுப்பாட்டினை கட்சியின் உறுப்பினர்கள் மீறியுள்ளதாக தலைவர் கூறியிருந்தார்.
இரு தரப்பாரும் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், எந்த தரப்பும் மற்றைய தரப்பின் குற்றச்சாட்டுக்களை மறுக்கவில்லை.
எது எப்படி இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதுக்கு ஆதரவு வழங்கியதானது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் அவ்வாறான குற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல் இருந்தும், அதனை தடுக்காமல் இருந்தது தலைவர் செய்த மாபெரும் குற்றமாகும்.
அரசாங்கம் கொண்டுவருகின்ற இருபதாவது திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கும் நோக்கில் ஆளும்தரப்புடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற செய்தி முன்கூட்டியே கசிந்திருந்தது. இதனை தலைவரும் நன்றாக அறிந்திருந்தார்.
ஆனால் இதனை கட்சியின் நிருவாக கட்டமைப்பு ஊடாக தலைவர் துரிதமாக அல்லது இதயசுத்தியுடன் செயல்பட்டிருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. மாறாக வழமை போன்று தனது அலட்சியப் போக்கினையே இந்த விடயத்திலும் தலைவர் கடைப்பிடித்தார் அல்லது பாசாங்கு செய்தார்.
அதாவது இருபதாவது திருத்தத்திற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல்நாள் அதியுயர்பீடத்தினை கூட்டி “இந்த திருத்தத்தினை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும்” என்ற உறுதியான தீர்மானத்தினை எடுத்து அதனை பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்திருக்கலாம்.
அவ்வாறு அறிவித்திருந்தால், கட்சிக்கு கட்டுப்படுவதா ? அல்லது அரசாங்கத்தின் சலுகைகளுக்கு விலை போவதா ? என்ற தர்மசங்கடமான நிலை மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் பெரும்பாலும் கட்சிக்கு கட்டுப்பட்டே நடந்திருப்பார்கள்.
அத்துடன் இருபதாவது திருத்தச்சட்டம் தோல்வியடைந்திருக்கும்.
அவ்வாறு கட்சியின் தீர்மானத்தினை மீறுகின்றபோது குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் தேர்தல்கள் வருகின்றபோது இவ்வாறு அதியுயர்பீடத்தினை கூட்டி தாங்கள் யாருக்கு ஆதரவளிப்பதென்று முன்கூட்டியே அறிவிப்பது வழமை.
அவ்வாறான சம்பிரதாயத்தை இருபதாவது திருத்தத்திற்கு வாக்களிக்கின்ற விடயத்தில் பின்பற்றாததுதான் வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.
இது தலைவரின் முழுமையான சம்மதத்துடன் முஸ்லிம் மக்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும், ராஜபக்சாக்களுக்கும் ஒரே நேரத்தில் நன்றாக நடித்திருக்கின்றார்கள். அல்லது வெள்ளோட்டம் பார்த்திருக்கின்றார்கள்.
அதாவது வாக்கெடுப்புக்கு பின்பு ஜனாசாக்களை எரிப்பதனை ராஜபக்ஸ அரசாங்கம் கைவிடுவதுடன், அமைச்சர் பதவிகள் வழங்குவதற்கு சம்மதித்திருந்தால், இருபதுக்கு வாக்களித்த உறுப்பினர்களுக்கு எதிராக இன்று இருப்பதுபோன்று பாரிய எதிர்ப்பலைகள் இருந்திருக்காது.
அவ்வாறான சூழ்நிலையில் சஜித் தலைமையிலான மக்கள் சக்தியினர் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிவிட்டு, தலைவரும் வழமைபோன்று ராஜபக்சாக்களுடன் இணைந்துகொண்டு அமைச்சர் பதவியை பெற்றிருப்பார். இதுபோன்றுதான் இருபது வருடங்களாக நடைபெற்று வருகின்ற எமது அரசியலாகும்.
எனவே கடந்த காலங்களைப்போன்று இம்முறையும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கையில் ராஜபக்சாக்கள் ஊடாக இறைவன் இவர்களின் சுயரூபத்தினை வெளிப்படுத்தியுள்ளான்.
அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்துவது மட்டும் இதற்கான தண்டனையல்ல. மாறாக தனது கடமையை சரியாக செய்யத்தவறிய தலைவரை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதுதான் நியாயமான தண்டனையும், தீர்வுமாகும்.
இது நடக்குமா ? எதுவும் நடக்காது.
முகம்மத் இக்பால்
 
சாய்ந்தமருது


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here