பிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2 – மழையால் ஆட்டம் பாதிப்பு

0
1

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து இருந்தது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஷேன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.
அவர் 108 ரன்னும், மேத்யூ வேட் 45 ரன்னும் எடுத்தனர். கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்னிலும், கேமரூன் கிரீன் 28 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.
6-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. 95.1 -வது ஓவரில் அந்த அணி 300 ரன்னை தொட்டது.
பொறுப்புடன் ஆடிய பெய்ன் 102 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். 35-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 9-வது அரை சதமாகும்.
இந்த ஜோடியை ஒரு வழியாக ‌ஷர்துல் தாகூர் பிரித்தார். ஸ்கோர் 311 ஆக இருந்தபோது டிம் பெய்ன் 50 ரன்னில் அவரது பந்தில் பெவிலியன் திரும்பினார். 6-வது விக்கெட் ஜோடி 98 ரன் எடுத்தது.
அதன்பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. கேமரூன் கிரீன் 47 ரன்னிலும், நாதன் லயன் 24 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டம் இழந்தனர். கம்மின்ஸ் 2 ரன்னில் ‌ஷர்துல் தாகூர் பந்தில் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை நடராஜன் கைப்பற்றினார்.ஹாசல்வுட் 11 ரன்னில் அவரது பந்தில் போல்டு ஆனார். ஆஸ்திரேலியா 115.2 ஓவரில் 369 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
தமிழக வீரர்கள் டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ‌ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். அறிமுக டெஸ்டிலேயே தமிழக வீரர்கள் இருவரும் முத்திரை பதித்தனர். மராட்டியத்தை சேர்ந்த ‌ஷர்துல் தாகூர் தனது 2-வது டெஸ்டிலேயே சாதித்தார். முகமது சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்க ஜோடி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
ஆட்டத்தின் 7-வது ஓவரில் சுப்மன்கில் 7 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 11 ஆக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 44 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து புஜாராவுடன் கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். 26-வது ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் போட்டி ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் லயன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here