போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காததால் விரக்தி…. பிரபல நடிகையின் படப்பிடிப்பை விவசாயிகள் நிறுத்தியதால் பரபரப்பு

0
1

படப்பிடிப்பு தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் தடக், கோஸ்ட் ஸ்டோரீஸ், அங்கிரேஸி மீடியம், குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
தற்போது ‘குட்லக் ஜெர்ரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இது நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்காகும். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் தயாரிக்கிறார். சித்திக்சென் குப்தா இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பஸ்சி பதானா நகரில் நடந்து வந்தது. இந்தநிலையில் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு விவசாயிகள் திரண்டு வந்தார்கள். அவர்கள் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமானோர் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்பு குழுவினரிடம் பேசிய விவசாயிகள், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். 40 நாட்களை கடந்து விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை இந்தி நடிகர்- நடிகைகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பவும் இல்லை’ என்று கூறி படப்பிடிப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜான்விகபூர்
அவர்களிடம் இயக்குனர் சித்திக்சென் குப்தா பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் தரப்பில் இருந்து நடிகை ஜான்விகபூர் அறிக்கை வெளியிடுவார். விவசாயிகளுக்காக நிச்சயம் குரல் கொடுப்போம் என்று கூறி சமாதானம் செய்தார்.
இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக 3 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து நடிகை ஜான்விகபூர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here