மட்டக்களப்பில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்: ஒருவர் படுகாயம்

0
2

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், யானையின் தாக்குதலினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்ப்வம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாந்தோட்டம் பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மக்களின் வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லையும் சாப்பிட்டுச் சென்றுள்ளன.

இதன்போது தமது வீட்டை உடைத்த யானையினை துரத்த முற்பட்ட ஒருவர் யானையினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்தவர் குறித்த கிராமத்தினை சேர்ந்த கதிர்காமத்தம்பி புவிராஜா(65வயது)என்னும் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

இக்கிராமத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது வயல் விதைப்பு காலம் நடைபெற்றுவரும் நிலையில் யானைகளினால் விவசாய செய்கைகளும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானை வேலிகளை அமைத்து யானைகள் கிராமங்களுக்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here