இந்திய உயர்ஸ்தானிகர் – முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு.

0
1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,

 கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயை செவ்வாய்கிழமை (25) முற்பகல் சந்தித்து சமகால அரசியல் நிலவரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குதல் மற்றும் புதிய அரசியலமைப்பை தயாரித்தல் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 9ஆவது பாராளுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஆற்றிய உரையில் குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் பிரமுகர்கள் சிலரும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் கூறிவருவது பற்றி அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன.
அத்துடன் நாட்டில் வாழும் சகல சமூகத்தினரும் பயனடையக் கூடிய வகையில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கப்படுவது சாலச் சிறந்ததாக இருக்குமென்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை நீர் விநியோகத் திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாகவும் உயர்ஸ்தானிகரிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், ஹாபிஸ் நஸீர் அஹமத், பைசல் காசிம் ஆகியோரும் இதில் பங்குபற்றினர். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப் தூhதரகத்தின் அரசியல் மற்றும் கொன்சூலர் பிரிவிற்கு பொறுப்பான பானு பிரகாஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.
பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்ட இந்தச் சந்திப்பு நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்ததாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here