சஜித் பிரேமதாச, செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி விட்டார்.

0
21

தேர்தலுக்கு முன்னர் சிறுபான்மை கட்சிகள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ஐக்கிய மக்கள்
சக்தி கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீறியுள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதலில் நன்றியை கூறிக்கொள்கின்றேன்.

இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தல் வழமைக்கு மாறாக மிகவும் வித்தியாசமான ஒரு தேர்தலாக காணப்பட்டது.

இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், அநியாயத்திற்கும் எதிரான ஒரு தேர்தலாக காணப்பட்டது.

எனவே அந்த வகையில் ஆளுகின்ற மொட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள், அதில் இந்த குறிப்பாக வன்னி மாவட்டத்தில் வேட்பாளராக இருந்த பலரை பார்க்கும் பொழுது இந்த வன்னி மாவட்டத்தில் பணத்தை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி எப்படியாவது அவர்கள் ஆசனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அதேபோன்று இந்த ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் அடிமைப்பட்டவர்கள் அல்லது கடமைப்பட்டவர்கள் அல்லது அவர்களது பிடிக்குள் அகப்பட்டவர்கள் இந்த தேர்தலின் முன் நின்று பணம் செலவழித்ததை காணக்கூடியதாக இருந்தது.

மக்களை ஏதோ ஒரு வகையில் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வைப்பதற்காக பண பலத்தை பிரயோகித்தார்கள். அதே போன்று பல சலுகைகளை செய்தார்கள்.

கடைசியாக மக்களை ஏமாற்றி சாராயத்தை கூட வழங்கி இந்த வாக்குகளை பெற வேண்டும் என்பதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்டு தான் இந்த வாக்குகளை பெற்றார்கள்.

அப்படி இருந்தும் கூட உண்மையாக ஜனநாயகத்தை விரும்புபவர்கள் இந்த ஆட்சியில் வெறுப்பைக் கொண்டவர்கள், அதே போன்று இந்த நாட்டில் இருக்கின்ற சட்டத்தையாவது, சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற அந்த சட்டத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள், இந்த நாடு தொடர்ந்தும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த பல மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு துணிந்து வாக்களித்தார்கள்.

எனவே இதன் நிமித்தம் தான் நாங்கள் இரண்டு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி வன்னி மாவட்டத்தில் பெற்றுக் கொள்ள இருந்தும் ஒரு சில வாக்குகளினால் இரண்டாவது ஆசனம் கிடைக்காமல் போனது.

எனவே இந்நிலையில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித் பிரேமதாசவின் கட்சிக்கு ஆதரவளித்து, அந்த கட்சிக்கு வந்த வாக்குகளை நாங்கள் பார்க்கும் போது மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான வாக்குகளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி , மனோ கணேசனின் கூட்டணி ஆகியவை பெற்றன.

குறிப்பாக வடக்கு , கிழக்கு , மலையகம் போன்ற சிறுபான்மை மக்கள்சஜித் பிரேமதாசவின் நம்பிக்கை கொண்டு இவர் சிறுபான்மை மக்களை பாதுகாப்பார், அவர்களது உரிமைகளைப் பெற்றுத் தருவார், இந்த அரசாங்கத்தை விட சிறுபான்மை இன மக்கள் மத்தியில் இரக்கம் கொண்டவர் என்ற அடிப்படையிலேயே தான் இந்த வாக்குகளை வழங்கினார்கள். ஆனால் இவருக்கு இது ஒரு பயிற்சிக்களமாக அமைந்தது.

இந்த தேர்தல் முடிவடைந்த பின்பு எவ்வாறு தேர்தலுக்கு முன்னர் இந்த சிறுபான்மை கட்சிகள் அவரிடம் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ஒப்பந்தம் செய்து கொண்டார்களோ அந்த ஒப்பந்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீறி இருக்கின்றமை அப்பட்டமாகத் தெரிகின்றது.

கடந்த காலங்களில் தேசிய பட்டியலுக்காக கட்சியின் தலைமைகளிடத்திலேதான் வாக்குக் கேட்டவர்கள் , அல்லது அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த காலத்தில் போய் நிற்பதை நாங்கள் கண்டோம்.

ஆனால் இந்த முறை அதற்கு மாற்றமாக இந்த சிறுபான்மை கட்சித் தலைமைகள் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் தேசிய பட்டியலுக்காக காத்தக்கிடப்பமை பார்க்கும் போது உண்மையில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கின்ற அல்லது எதிர் காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு இவர் உதவுவதாக அல்லது அந்த மக்களுக்கு காப்பீடாக அமைவாரா?

இந்த தேசியப்பட்டியல் விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் அதே போன்று தலைவர் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையில் மக்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.

எனவே இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் சஜித் பிரேமதாச முன்னெடுக்கின்ற பட்சத்தில் தான் எதிர்காலத்தில் இந்த கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்ற அந்த நம்பிக்கையும், உண்மையான நிலைப்பாடும் இந்த வன்னி வாழ் மக்களுக்கும், அதேபோன்று இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களை நாங்கள் கேட்கும் பொழுது இந்த நிலைமை தெளிவாகப் புலப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here