
சென்னை: தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
தென் தமிழக, கேரள கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் 60 கிமீ வேகத்தில் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும், குமரி பகுதியிலும் காற்று வீசக்கூடும். குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் 15 செ.மீ மழையும், தென்காசி ஆய்க்குடியில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சங்கரன்கோவிலில் 11 செ.மீ., தென்காசியில் 10 செ.மீ., சிவகிரியில் 8 செ.மீ. பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.