உலகம்

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பரபரப்புக்கு இடையே, கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக அந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு, மீண்டும் மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரே நாடாகவும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 1 கோடியைத் தாண்டிய முதல் நாடாகவும் அமெரிக்கா ஆகியிருக்கிறது.

கொரோனா பாதிப்புப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில், அமெரிக்காவின் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பு விகிதம்தான் இந்த மாதத்தில் இரண்டு இலக்கத்தைத் தொட்டுள்ளது.

பல மாதங்களுக்கு முன்னரே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்ததைப் போல, அந்த நாட்டில் மூன்றாவது கொரோனா அலை எழுந்துள்ளது.

அமெரிக்காவின் கொரோனா நிலவரம் இவ்வளவு மோசமாக இருந்தாலும், அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் இருக்கும் ஐரோப்பாவின் நிலைமை அதைவிட அதிக கவலைக்குரியதாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரம்ப காலத்தில் உலகின் கொரோனா மையமாக இருந்த ஐரோப்பாவில், அந்த நோய்த்தொற்றின் தீவிரம் வெகுவாகக் குறைந்து பல மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது.

ஆனால், இவ்வளவு காலமாக அடங்கியிருந்துவிட்டு, தற்போது கொரோனா நோய்த்தொற்று மீண்டும் வீரியம் எடுத்துள்ளது உண்மையிலேயே அபாயகரமான போக்கு என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய நிலையில் கொரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 10 இல் 7 நாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன.

இந்த மாதம் மட்டும் பிரான்ஸில் ஏறத்தாழ இந்தியாவுக்கு இணையாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி, பிரிட்டன், போலந்து ஆகிய நாடுகள், இந்த மாத கொரோனா பாதிப்பில் பிரேஸிலை விஞ்சியுள்ளன.

குளிர்கால அபாயம் : ஐரோப்பாவில் குளிர்காலம் தொடங்கிய பிறகு கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசும் என்று நிபுணர்கள் ஏற்கெனவே எச்சரித்தனர்.

குளிர் காரணமாக பொதுமக்கள் உள்ளரங்குகள் மற்றும் மூடப்பட்ட இடங்களில் அதிக நேரம் செலவிடுவார்கள் இது, கொரோனா பரவலைத் தீவிரப்படுத்தும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே ஐரோப்பாவில் இரண்டாவது கொரோனா அலை தொடங்கிவிட்டதை தற்போதைய புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மட்டும், நாளொன்றுக்கு தினமும் 3 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இதன் காரணமாக, பல ஐரோப்பிய நகரங்கள் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Related posts

தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்!

farookshareek

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.6 ரிக்டர் ஆகப் பதிவு

farookshareek

யுக்ரைனுக்கு அருகில் புதிய இராணுவத்தை அதிகரித்துள்ள ரஷ்யா

farookshareek

Leave a Comment