இந்தியா

பொதுவாழ்வுக்குப் பலனளிக்குமா கமலின் முதல் முயற்சிகள்?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஸ்ரீநிவாசன் ராஜலட்சுமி தம்பதியின் 4 ஆவது மகன் கமல்ஹாசன். வழக்குரைஞர் குடும்பத்தில் பிறந்த கமலின் மீது ஒளிபடரச் செய்தவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார். மோதிரக் கையால் குட்டுப்பட்ட குழந்தை நட்சத்திரத்தின் நடிப்புக்குக் குடியரசுத் தலைவரின் பரிசு கிடைத்தது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசனின் கரம் பிடித்து வளர்ந்த கமலுக்கு சின்னப்பத் தேவரின் கையொப்பமிட்ட தொகை நிரப்பப்படாத காசோலையாகக் கிடைத்தது. கே. பாலசந்தர் மூலம் அறிமுகமான கமல் ஹாசன், பின்னாளில் இந்திய திரை உலகின் விலாசமானார்.

கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடங்கி, டிஜிட்டல் சினிமா காலம் வரை திரை உலகில் கமல் ஹாசன் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் ஏராளம். நடிகர், கதாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மை கொண்டவர். முன்மாதிரி கலைஞனாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியவர். கண் தானம், உடல் தானம் செய்த முதல் திரை கலைஞரும் கமல் ஹாசன் தான். தனது 100 ஆவது படமான ராஜபார்வையில் பார்வையற்ற இளைஞனாக கமல் நடித்துள்ளதை நாம் அறிவோம். பார்வையற்றவர்களுக்கு எல்லாமே ஒன்று தான் என்பதால் இந்தப் படத்தின் டைட்டில் கார்டில், யார் என்ன பணி செய்தனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லாமல், அதாவது கதை, திரைக்கதை, ஓளிப்பதிவு, இசை என எந்தவிதமான முன் இணைப்புகளும் இல்லாமல் படத்தில் பணியாற்றியவர்கள் பெயர்கள் மட்டுமே தொடர்ச்சியாக வரும்.

விக்ரம் படத்தில்…

முரண்பாடுகளும் விடாமுயற்சியும் ஒருங்கே பெற்றே முதன்மை கலைஞன் கமல் ஹாசன். வசூல்ராஜா எம்பிபிஎஸ், விருமாண்டி, விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தன. ஆனால் அந்த மூன்று திரைப்படங்களுமே கமலுக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தன. உச்சஸ்தாயி ஸ்ருதியில் பாடல் பாடுவதாகட்டும் மெட்ராஸ் பாஷையில் கீச்சுவதாகட்டும் கமலுக்கு நிகர் கமல் தான். பேசும் படம் என்ற பெயரில் பேசா படம் எடுத்து எல்லோரையும் பேச வைத்தவர். ஃபிலிம்ஃபேர், மாநில அரசுகளின் விருதுகள், பத்ம விருதுகள் என தட்டித் தூக்கியது ஏராளம். ஐந்து மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள கமலுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு அனைத்தும் அத்துப்படி.

இந்தியத் திரையுலகம் கண்ட ஒப்பற்ற கலைஞர்களில் கமல் ஹாசனுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதுவரை மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் பெற்ற கமலின் நடிப்புத் திறன் பலரையும் வியக்க வைத்துள்ளது. தனது 61 ஆண்டு கால திரை உலக வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கமல் மேற்கொண்ட பல முயற்சிகள் அவருக்குப் பாராட்டைப் பெற்று தந்துள்ளன. பல்வேறு மொழிகளில் இதுவரை 231 திரைப்படங்களில் நடித்துள்ள கமல், தனது நடிப்பில் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு விஷயங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

குருதிப்புனல் படத்தில்…

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் தான் தமிழ்த் திரை உலகில் முதன்முதலாக பாடல் பதிவுக்காகக் கணினி பயன்படுத்தப்பட்டது. அதேபோல தமிழ்த் திரை உலகில் முதன்முதலாக மென்பொருள் மூலம் திரைக்கதை (Screenplay writing software) எழுதும் முறை கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான மகாநதி திரைப்படத்தில் தான் இந்திய திரை உலகில் முதன் முதலாக ஆவிட் என்ற படத்தொகுப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. தமிழில் டால்பி ஸ்டீரியோ ஒலி தொழில்நுட்பத்துடன் வெளியான முதல் திரைப்படம், 1995-ல் வெளியான குருதிப்புனல்.

இந்தியத் திரை உலகில் முதன்முதலாக பிராஸ்தெட்டிக் வகை ஒப்பனைக் கலை அறிமுகபடுத்தப்பட்டது கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் தான். இந்தப் படத்தில் வயதான தோற்றத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக கமல் நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001-ல் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் தான் இந்திய திரை உலகில் முதன்முதலாக மோசன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இந்தியன் படத்தில்…

2004 இல் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் தான் தமிழ்த் திரை உலகில் முதன்முதலாக நேரடி ஒலிப்பதிவு (Live recording system) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி மொழிகளில் 2005-ல் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இந்தியத் திரை உலகில் முதன்முதலாக டிஜிட்டல் வடிவம் பயன்படுத்தப்பட்டது. அதே போன்று 2013-ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தில் தான் இந்தியாவில் முதன் முதலாக ஆரோ 3டி ஒலி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற பரிசோதனைகளுடன் வெளியான திரைப்படங்கள் கமல் ஹாசனின் கலை வாழ்க்கைக்கு பெருமை சேர்த்தன. ஆனால் அரசியலில் இதுபோன்ற முதல் முயற்சிகள் எடுபடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Related posts

புதிய அணி அமைக்கும் தகுதி – கமல் விளக்கம்!​

farookshareek

பகைமையை உருவாக்கும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்

farookshareek

சா்வதேச விமான சேவை – Feb 28 வரை தடை!

farookshareek

Leave a Comment