போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில், சிறைவாசம் அனுபவித்து வரும் 46 பெண்களுடைய பிள்ளைகளும் சிறைச்சாலைக்குள்ளேயே தங்கும் நிலைமை காணப்படுவதால், அவ்வாறான சிறுவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தெரிவித்துளாரெனவும் கூறப்படுகிறது.
கர்பிணிகளாக இருக்கின்ற போதும், பிள்ளை பிறந்த சில நாள்களில் சிறைக்குச் சென்ற தாய்மார்களின் பொறுப்பில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடப்பட்ட 46 பிள்ளைகள் இருப்பதாகவும், இவர்கள் சகலரும் 5 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனால், மேற்படி பிள்ளைகளை விடுவிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அது தொடர்பான தகவல்களை விரைவில் பிரதமருக்கு அறிவிக்க உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.