பொத்துவில் பிரதேசத்தில், பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மக்கள் மத்தியில், முன்னறிவிப்பின்றி நுழைந்து, காணிகளை அளவீடு செய்வதையும் பாதுகாப்புப் படையினரையும் அழைத்துவந்து, மக்களைப் பீதிக்குட்படுத்தும் வகையில் நடந்துகொள்வதையும் கண்டித்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தொல்பொருள் திணைக்களத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஊடகங்களுக்கு நேற்று அறிக்கையொன்றை விடுத்திருந்த அவர் அதில், “பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்று, மக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதால்தான், இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, முதலில் பிரதேச மக்களோடு பேசவேண்டும். பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் ஊடாக, பள்ளிவாசல் நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனைத் தெளிவுப்படுத்த வேண்டும். அத்துடன், இந்த விடயத்தில் அவர்களின் கருத்துகளையும் உளவாங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், “மக்களின் பூர்வீக விடயங்கள், உறுதிப்பத்திரம், இது தொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே, இது தொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்றும் அவர் அதில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.